Thursday 23 June 2011

இருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~

பின்னே திரிந்துன் அடியாரை பேணி பிறப்பறுக்க !

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதன் மூவருக்கும் !

அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே !

என்னே இனியுன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே !

<பொருள்>

முதற்கடவுளான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே !உலகத்து உயிர்களின் 
நன்மையின் பொருட்டு அபிராமி எனப் போற்ற பெறுகின்ற அருமருந்தாய் 
விளங்குபவளே !உன்னை நான் மறவாமல் என்றும் துதிப்பேன் !
இனிமேல் எனக்கு என்ன கவலை ? இத்தகைய பேரு எனக்கு வாய்த்ததிற்கான காரணம் யாது ? நின்னடியாரின் பின்னால் திரிந்து 
அவர்களை போற்றி பிறப்பை அறுப்பதற்கு தக்கபடி முன் பிறவியில் 
தவத்தை ஆற்றி உள்ளேன்!......



இருபத்தி நான்காம் பாடல் ~~~~~~

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த !
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதாவர்க்கு !

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே !

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே !

<பொருள்>

மாணிக்கம் போன்றவளே ! மணியில் பொருந்திய ஒளி போன்றவளே !
விளங்கும் உயர்ந்த மணிகளால் இயற்ற பெற்ற அணி போன்றவளே !
அணிந்து கொள்ளும் அணிகளுக்கு அழகாக விளங்குபவளே !
நின்னை அணுகாதர்வற்கு நோய் போன்றவளே !பிறவி என்ற நோய்க்கு மருந்தாக விளங்குபவளே !தேவர்க்கு பெருவிருந்தாக விளங்குபவளே !
நின் தாமரை பாதங்களை வணங்கிய பின் வேறு ஒருவரையும் வணங்க மாட்டேன் !